*** வில்வரசு பாண்டியன் *** |
ஆருயிரே அரசே!
தென்னவனே பாண்டியனே!
உன் பார்வையில் நான் என்னை பார்க்கின்றேன் எனைஈன்ற தாய் சிலிர்த்தென்னை பார்த்தது போல!
எமதுயிர் புதுஉடலோடு அளவலாவுவதை பார்க்கும் பொழுதுகள் விவரிக்க முடியாத சிலிர்ப்பு கூச்செரியல்கள்!
உன்னில் என்னை பார்க்கும் போதும் எந்துணைவி உன்னை கொஞ்சும் போதும் ஆயிரம் கமலங்கள் மலர்கின்றன கையளவு இதயக்கூட்டில்.
உன் மழலை பார்வை உன் குழந்தையாய் என்னை மாற்றுகிறது.
உன் மென்மை தழுவல் இறைவனுக்கு அருகில் என்னை சேர்க்கிறது.
உன் அழகிய புன்முறுவல் அத்தனை இன்பத்தையும் கடைசிக்கு தள்ளுகிறது.
உன் இருவிழி அசைவில் நான் சிறியவனாகி போனேன்.
என் ஆணவம் அமிழ்ந்து போனது. அகங்காரம் நொறுங்கி போனது.
ஒன்றும் பேசாமலே எல்லாம் சொன்னாய்.
ஒன்றும் தெரியாமலேயே எல்லாம் தெளிவித்தாய்.
ஒன்றும் செய்யாமலேயே எல்லாம் செய்தாய் - நீ என்னில்.
உன்னில் அடங்கி உன்னில் மயங்கி உன்னை உணரும் பொழுதுகள்
எங்கும் நிரம்பி விரவிப் பரவும் இறைப்பொழுதுகள் .
ஆம் நீ இறைவன்! மழலை இறைவன்!
வாழ்க வளமுடன்!