விநோதமானவள்! |
கடற்கரை மணலில் கட்டுமரத் தோணியில்
நிலவுகுளிர் மொழியாய் பொழிந்தவள் நீ!
அழகுவிழி கதிர்வீச செவ்விதழ் வாய்பேச
மனம்திறந்து குணம் காட்டியவள் நீ!
ஐம்புலனும் உனைநோக்க ஐம்புலனையும் நான்நோக்க
மெய்யாய் மெய் பேசியவள் நீ!
பின்பனி குளிரில் பிசுபிசு ஈரக்காற்றில்
வல்லினம் தன்னோடு மெல்லினமானவள் நீ!
குற்றமற்ற நெஞ்சோடு அச்சமற்ற பேச்சோடு
மழலையாய் மலராய் மலர்ந்தவள் நீ!
நான் கவிஞனானேன்
கவிதையாய் உன்னை சுவாசித்தால்
என்னிதயம் மலர்கிறது
மலராய் நீ மணம் பரப்புவதால்
வெள்ளந்திப் பெண்ணே
செவ்வந்தி சிவப்பழகே
கண்சிமிட்டும் மின்மினியே
மெல்லிதழ் தேன்மொழியே
உன்னால் நானனைந்தேன்
நட்புமழையில் தொப்பல்தொப்பலாய்!
சிலமணித் துளியில் ஓருயிரை
ஆறறிவினை மகிழ்வித்த இளமொட்டே
உன் இனிமை சிறக்கட்டும்
உன் இளமை நீடிக்கட்டும்
உன் வளமை பெருகட்டும்
உன்னால் எல்லோரும் மகிழட்டும்
நீனினைப்பது போல் மகிழ்வாய் நீயும்.
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment