வல்லமை தாராயோ!
அன்னைத் தமிழே! ஆறாவது அறிவுயிரே!!என்னை மனிதனாக்கி மானம், இனம் வகுத்து காத்து
நானிலம் போற்றும் நற்றமிழே! என் நறுந்தமிழே!
உனக்கும் உன் மைந்தர்களுக்கும் என் முதல் வணக்கம்!
ஏரிக்கரை கவியரங்க மாலை வணக்கம்!!
வல்லமை தாராயோ!
பொய்மையும் வஞ்சமும் பொசுங்கி அழிய
கயமையும் இன்மையும் கடல் கடந்தோட
வீரமும் காதலும் வீருபட எழ
வேல் கொண்டு வேள் காத்திட
வல்லமை தாராயோ!
அன்னை உன் பாதத்தில் அணிகலனாய் ஒலியெழுப்பி
ஆசையை அமுதாய் மழலைத் தமிழ் பேசி
மாலையில் மயங்கி உன் மடியில் உறங்கி
தாலாட்டு கேட்டு தாரணி ஆழ
வல்லமை தாராயோ!
சிரித்தாடும் மயிலினங்கள்
சிலிர்த்தோடும் மலையருவிகள்
தெம்மாங்கு குயிலினங்கள்
உடன்பிறப்பாய் ஊர்சுற்றும் பறவையினங்கள்
அங்கே மனிதம் மட்டும் மடுவாய்
ஏடெடுத்து சீர்படித்து மீட்டெடுக்க
வல்லமை தாராயோ!
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன் - போய்
காசு இருந்தால் சொல்லி அனுப்பு
கைபிடிக்க விளைகிறேன்
திருமண திருடல்களை தீர்வு செய்ய
திருத்தி எழுதி திசை செய்ய
வல்லமை தாராயோ!
அறிவும் ஆற்றலும் போய் சூது வாது பேசி
ஆண்மை அழிந்து வீரியம் சிதைந்து
விலங்கு பூட்டி விலங்காய் மாறிடும்
இக்கால மாக்களை கற்கால மாந்தராய் மாற்றிட
சிந்தை குளிர் சீர்தமிழ் தனியனாய் வலம் வர
வல்லமை தாராயோ!
அன்னிய மொழி கற்று நித்தம் அவருக்குழைத்து
சுயம் அழிந்து சுயதூயத்தமிழ் தொலைத்து
பொய்க்கனல் வீசி பொய்யுரை பேசி
ஏழையோரை ஏய்க்கும்
எம் உடன்பிறப்பை உருமாற்ற
வல்லமை தாராயோ!
வேருபாடி உலகின் கூறுபாடு உணர்ந்து
குற்றமும் குறையும் பொது
அதைகளைவதும் காப்பதும் பொது என
உள்ளத்தில் உள்ளதை உலகுக்கு உணர்த்தி
கபட எண்ணத்தை கனவிலும் பொசுக்கி
வேங்கை மார்பில் உலகு சுமக்க
வல்லமை தாராயோ!
தேனும் தினைமாவும் கம்பும் கிழங்கும்
தின்று தினவெடுத்து திரிந்த தமிழன்
கஞ்சிக்கும் காசுக்கும் வழியின்றி
அடிமையாய் அவலுறும் எறும்பாய் பிழைக்கும்
இம்மண்ணின் வீரிய வித்தினை
ஆல் போல் காக்க விழுது போல் வேரூன்றி நிலைக்க
வல்லமை தாராயோ!
ஏதோ அறிவியலை எட்டாக் கனிபோல்
ஐரோப்பாதான் உலக ஆணி வேர்போல்
பொய்யுரை பேசி மெய்யுரை அழித்து
புறப்பொருள் வாழ்வில் அகப்பொருள் தொலைத்து
இவ்விழிவு அகற்றி இல்லறம் நல்லறமாய் என்றும் வெல்லறமாய் வளர வலம் பெற
வல்லமை தாராயோ!
மலர்ந்தது மணம் வீசியது உதிர்ந்தது
இம்முக்கோண வாழ்க்கை வழக்கில்
மூன்றையும் முழுக்க உணர்ந்து
மானமுள்ள மனமுள்ள முனைப்புள்ள
மைந்தனாய் மாந்தனாய் புனிதனாய்
புது உருகொள்ள திரு வடிவெடுக்க
வல்லமை தாராயோ!
என் தாய் தமிழே! உயிர் தமிழே!
Wednesday, June 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment